தமிழ்த்தாய்க் கோயில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள கம்பன் மணி மண்டப வளாகத்தின் தெற்கே அமைந்துள்ளது.
தமிழ்த்தாய்க் கோயிலின் தோற்றம்:
தமிழ்த்தாய்க்குக்
கோயில் எழுப்பியவர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின்
அன்றைய முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் 23.04.1975
அன்று
தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் அடிகல்ட்நாட்டு விழா நடைப்பெற்று, பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம்
நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்த்தாய்க்கு வடிவம் கொடுத்தவர்கள் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களும், சிற்ப கலாசாகரம் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை. கணபதி ஸ்தபதியும் ஆவர். கோயிலின் இறுதிக் கட்டப்பணிக்கு அப்போதைய மத்திய
நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் பெருமுயற்சியால் தமிழக அரசு மீண்டும் ஐந்து
லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பிறகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால்
தமிழ்த்தாய்க் கோயில் 16.4.1993 அன்று திறக்கப்பட்டது.
கோயிலின் அமைப்பு:
தமிழ்த்தாய்க்
கோயில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணி மண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது.
மும்முனை நிலத்தில் ஆறு பட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோயிலாக அமைந்து
காணப்படுகிறது. தமிழ்த்தாய்க் கோயிலின் பவார தெய்வங்களாக, வடகீழ்க் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வடமேல்கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர்.
தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப் பெற்றிருக்கின்றனர். கருவறையில்
தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில்
விளங்குகின்றனர்.
தமிழ்த்தாயின் திருவுருவ அமைதி:
கருவறையில்
தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள்.
வலது முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில்
உருத்திராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம்பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி
வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த்தாயின் வலது கால் கீழே தொங்கியவாறும், இடதுகால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக
வீற்றிருக்கிறாள். தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன.