தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

சனி, 19 ஜூலை, 2014

தமிழ் மொழியின் வகைகள்



கொடுந்தமிழ்

 தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழக்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுது கொடுந்தமிழ் எனப்படும். கொடுந்தமிழ் ஒரு மரபுச் சொல் வழக்கே இன்றி மொழியின் உயர்வு தாழ்வினைச் சுட்ட இல்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுந்தமிழ் மொழியை மட்டுமல்லாமல், அது பேசப்பட்ட நிலத்தையும் குறித்து நின்றது. "பொதுமொழி வேரூன்றியிருந்த நாட்டை செந்தமிழ் நிலம் என்றும், அதிலிருந்து வேறுபட்டுக் கிளைமொழிகள் செழித்திருந்த தமிழ்நாட்டுப்பகுதிகளைக் கொடுந்தமிழ் நிலம் என்றும் பழங்காலத்துப்புலவர் பாகுபாடு செய்தனர் எனக் கொள்ளலாம்." கொடுந்தமிழ் பிற மொழி கலப்பினால் களங்கம் கண்ட தமிங்கிலம் போன்ற தமிழ் வழக்குகளை சுட்ட பயன்படுத்தப்படுவதில்லை.

செந்தமிழ்

சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும் உரைநடைத் தமிழையும் செந்தமிழ் எனலாம். செந்தமிழ் வட்டார மொழி வழக்குகளை தாண்டி அனைத்து தமிழர்களும் தமிழ் மொழியைப் பேச எழுத உதவுகின்றது. இது ஒரு வழக்கே தவிர, அரச நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட சீர்தரம் அல்ல. சீனம் போன்ற பிறமொழிகளைப் போலன்றி வட்டார மொழிக்களுக்கும் செந்தமிழுக்கும் இருக்கும் இடைவெளி சிறியதே, ஆகையால் செந்தமிழைதமிழர்கள் இயல்பாகவே பயன்படுத்துகின்றார்கள்.

"மதுரையை
 மையமாக கொண்டு, இந்தப் மிகப் பழங்காலத்திலேயே ஒரு செப்பமான மொழி உருவாகி வந்தது. இந்த மொழி பாண்டிய நாட்டில் பேசப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு, மற்றைய பிரதேச வழக்குகளின் அம்சங்களை உட்கொண்டதாக இருந்தது. இதன் கட்டுத் திட்டங்களை, இடைக்கால உரையாசிரியர்களின் காலத்திலிருந்தே சங்கம் என்று அழைக்கப்பட்ட, (கூட்டம், அவை, மதச் சங்கம், கல்லூரி என்ற பொருள்படும் சொல்லால் குறிக்கப்பட்ட) ஒரு இலக்கிய, கலாச்சார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டன. இது மிகவும் உற்று நோக்கப்படவேண்டிய செய்தி. ஏனெனில், மதுரையின் செப்பமான இலக்கிய மொழியிலிருந்து தற்கால தமிழ் வரை ஒரு நேரடியான வளர்ச்சி முறையை நாம் படிப்படியாக காட்டுதல் கூடும்." 
"இந்த செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட வட்டார மொழி பிற்காலத்தில் செந்தமிழ் என்று குறிப்பிடப்பட்டது; அதன் வளர்ச்சிக் காலத்தில் அது வாய்ப் பேச்சுக்கள் பெறும் வளர்ச்சியைப் பெற்றது; அது நிலைத்து "இலக்கிய" மொழியாகச் செந்தமிழ் என்ற நிலையை அடைந்த பிறகு மக்களால் பேசப்பட வில்லை; அது இலக்கியத்திற்கே உரியமொழியாகிவிட்டது..." 

தனித்தமிழ்

பிறமொழிச் சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் எனலாம்.தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாகக் கலந்து நிற்கும் வடமொழிச் சொற்களையும் தவிர்த்து எழுதுவதை இலக்காக்க் கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல் இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம்.

நற்றமிழ்

இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லத் தமிழ் எனலாம். நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. ஆனால், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளை கொண்டது. அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்கு பயன்படும் சொற்கள்), அனைத்துலக கணித இலக்கங்கள், ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும், களங்கப்பட்ட தமிழைத் தவர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்.

முத்தமிழ்

இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.
இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *